Monday, June 8, 2009

என் சில துளிகள்--கவிதாகரன்.


பாரிய அழிவையும் அவலத்தையும் சந்தித்து, இன்று எதிர்காலத்தை எத்திசையில் எதிர்பார்த்திருப்பது என்பது தெரியாமலே இடைத்தங்கல் முகாம்களுக்குள் சிக்கியிருக்கும் எங்கள் உறவுகளுக்கு நாம் என்ன செய்யப் போகின்றோம்? சரியான அரசியல் தலைமைகள் இல்லாத எம்முன்னே உள்ள பெரிய கேள்வி இது.

ஈழத்தமிழர்கள் எல்லோருமே ஈழத்தில் ஏதோவொரு நிர்ப்பந்தத்தில் இருந்தாலும் இன்றைய அவசியமான, அவசரமான உதவி இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களுக்கே என்பது என் கருத்து.

தொடர்ந்தும் அவர்களை முன்னிறுத்தி மாக்ஸிசம், ஜனநாயகம் பற்றி வெறுமனே வாய், எழுத்து வன்மைகளை காட்டப்போகின்றோமா??இல்லை..அவங்களாலதான், இவங்களால் தான் என எதற்குமே உதவாத குழாயடிச்சண்டை போடப்போகின்றோமா??

இல்லை..
ஆரோக்கியமாக அவர்கள் வாழ்வை சற்றேனும் வளப்படுத்த இப்படியும் செய்யலாம் என என் நண்பர் கவிதாகரன் தனது Facebook இல்
எழுதிய அவரது "எண்ணங்கள்", இன்றைய காலகட்டத்தில் சரியான திசையில் பயணிக்கின்றது என நான் கருதியதன் காரணமாக அவரின் அனுமதியுடன் இதனை இங்கு மீள்பதிவு செய்கிறேன்.

இது அவரது சொந்தக்கருத்து...இதில் சில முரண்கள் இருந்தாலும், (நடைமுறையில் அவர்களுக்கு எப்படி நேரில் உதவுவது?? தற்போதைய பாதுகாப்பு(?) கெடுபிடிகளை தாண்டி??) அதையெல்லாம் மீறி என்னைப்போலவே பலருக்கும் இது சரியென தோன்றும் என்றே நம்புகிறேன். தவறுகள் கண்டால் சுட்டிக்காட்டுங்கள்...சரி செய்து தொடர்ந்து பயணிப்போம்.

என் சில துளிகள்..எங்களை நாங்களே அழித்து கொள்ளப்போகின்றோமா??
---கவிதாகரன்.
நாம் எங்கே நிற்கிறோம்?..... சிங்களம் எங்கே நிற்கிறது?...
சிங்களம் தன் வேறுபாடுகளை எல்லாம் மறந்து மகிந்தவை தமிழனின் உடல் மீது நின்று கொண்டாடுகிறது. அதே நேரம் எல்லா வழிகளாலும் நொந்து போயிருக்கும் எம் மக்களை சீரழிக்கிறது.தமிழர்களை என்றும் இல்லாதவாறு தங்களுக்குள் முட்டி மோதவிட்டு நசுக்க நினைக்கிறது.

நிமித்தமும் உயிரை காப்பதற்காகாவும் மக்கள் ஏராளமாக அரசை அணுக போகிறார்கள்.ஏன் பெரும்பாலும் அவர்கள் கருணாவை கூட அணுக நேரிடலாம்.. பின்னர் அவர்களில் பலர் தொடர்புகளை அவனுடன் பேண வேண்டிய கட்டாயததுக்கு தள்ளபட போகிறார்கள்..நாம் அவர்களை துரோகிகள் என முத்திரை குத்தி சிங்களம் விரும்பிய படி எங்களை நாங்களே அழித்து கொள்ள போகிறோமா?

இராணுவ காட்டி கொடுப்பளர்கள் என்பது வேறு.மாற்று கருத்துள்ளவர்
என்பது வேறு. இரண்டையும் வேறு படுத்த முடியாமல் பல உயிர்கள் வீணாகி விட்ட தாய் என் மனம் சொல்கிறது.

இன்று ஆயுத போராட்டம் ஓய்ந்து விட்டது.. ஒவ்வொரு தமிழனும் ஏதோ ஒரு வகையில் ஒரு உறவையாவது இழந்திருக்கிறான்.

எனக்கு யார் தலைவர்.. உனக்கு யார் தலைவர் என்றும்.. துரோகிகள் என்றும் நாம் எம்மையே கொல்வதை விட்டு நாம் கொள்கையையே தலைமையாக கொண்டு இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது.. உனக்கு சித்தார்த்தன் தலைவராய் இருக்கட்டும்.. அவனுக்கு டக்லஸ் தலைவராய் இருக்கட்டும்.. எனக்கு புலி தலைவராய் இருக்கட்டும்.

நீ தமிழனுக்கு ஒரு நிதி அதிகாரம் கொண்ட(அதாவது நாம் வேளிநாடுககளிடம் நேரடியாக நிதியுததவிகளை பெறக்கூடிய, அதை எப்படி பயன் படுத்துவது என்பதை தீர்மானிக்க கூடிய), காவல்துறை அதிகாரம் கொண்ட ஒரு சுயாட்சி ஆவது தேவை என்பதை நம்புகிறாயா?(இராணுவம் மத்தியிடம் இ ருக் க ட் டும் பரவாயில்லை), அவனும் அப்படி நம்புகிறானா? நாம் வேறு பாடுகளை மறந்து ஒன்று இணைய வேண்டிய காலம் இது.

போராட்டம் தொடங்கியபோது இருந்த நிலைமை வேறு. இப்போது எமது நிலைமை வேறு.நாம் உலகெங்கும் பரவி இருக்கிறோம்.. எங்கள் மக்களை பொருளாதார ரீதியாகவும் , கல்வி ரீதியாகவும் மேம்படுத்த கூடிய நிலையில் இருக்கிறோம்.. private University களை நிறுவி சிங்களத்தின் Quota system மீறி நடை போடகூடிய நிலையில் இருக்கிறோம்.. எனவே எங்களுக்கு இராணுவ அதிகாரம் இல்லாத சுயாட்சி கிடைத்தாலே சிங்களத்தை விட எங்கள் மக்கள் முன்னேற கூடிய நிலைமை இருக்கிறது..நாம் வேறு பாடுகளை மறந்து இதற்காக வேனும் ஒன்று இணைய வேண்டிய காலம்.

வெளிநாடுகள் தமிழனுக்கு ஒரு வகையிலான சுயாட்சி தீர்வு தேவை என்பதை அங்கீகரிக்கின்றன.

எனவே தமிழனை பிரதிநிதித்துவபடுத்தும் எல்லா கட்சிகளும் தமிழனுக்கு சுயாட்சி தேவை என்பதை வலியுறுத்தும்போதோ அல்லது இது சம்பந்தமாக பேச்சுக்களில் ஈடுபடும்போதோ ஒரு குடை அமைப்பாக (Umbrella organisation) தொழில்படவேண்டும். இது நடைபெற வேண்டுமாயின் முதலில் மக்களாகிய நாம் இதை உணர்ந்து ஒன்று படவேண்டும்.எண்ணி பாருங்கள் நான் சொல்லப்போவதை..

சிங்களம் ஒன்றும் செய்ய வேண்டாம். அவர்கள் எங்கள் மக்களை 1 வருடம் இப்படி முகாம்களில் வைத்திருந்தால் போதும். அவர்கள் சிறுவர்களின் கல்வியை பாழாக்கி, எங்களின் கலாச்சாரத்த்தைகெடுத்து எம் மக்களை ஒரு நொண்டி சமூகமாக மாற்றிவிடமுடியும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.எண்ணி பாருங்கள் எம் மலையக சகோதரர் களுக்கு காலம் காலமாக நடப்பதை.. சிங்களம் அவர்கள் கல்வியை சிறுவயதில் (பலவழிமுறைகளை பாவித்து) குழப்பி விடுகிறது. அவர்களும் சிறுவர் தொழிலாளராய் மாறுகிறார்கள். பின்னர் சிறுவயதிலேயே திருமணமும் செய்து தந்தையும் ஆகிவிடுகிறார்கள். பிறகென்ன அவர்களால் அந்த பொறியில் இருந்து மீளமுடிவதில்லை.. காலம்பூராக குறைந்த கூலியில் வேலைசெய்ய வேண்டியவர்களாகி விடுகிறார்கள்.. அவர்களின் தலைமுறைச்சக்கரம் அப்படியே சுழல்கிறது.

அவதானமாக இல்லா விட்டால் வன்னி மக்களும் கிழக்கு மக்களும் இது போன்றதொரு பொறிக்குள் மாட்டிவிடுவார்கள்.. இல்லை மாட்டபட்டுவிடுவார்கள்.

நாம் பல முனைகளில் போராடவேண்டி இருக்கிறது. முதலாவது முனை அரசியல் ரீதியில் ஒன்று இணைவது. இது பற்றி பார்த்துவிட்டோம். இரண்டாவது மக்களை மேற்சொன்ன பொறிகளில் விழாமல் அவர்களை பொருளாதாரரீதியிலும் கல்விரீதியிலும் பாதுகாத்து கொள்வது.அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன? Doing a one-off support is not enough to get them out of this trap regardless of how big the help is. நாங்கள் இனியும் உதவி நிறுவனங்கள் ஊடாக சிறு உதவிகள்(once in a while) அனுப்புவதுடன் நின்று விடமுடியாது. வெளிநாடுகளில் நெருங்கிய உறவினர்கள் இல்லாத ஒவ்வொருவரும் அடையாளம் காணப்படவேண்டும். அது விதவையாய் இருக்கலாம் . ஊனம் அடைந்தவாராய் இருக்கலாம்.. கல்வியை தொடரகஸ்டபடும் சிறுவனையோ சிறுமியையோ கொண்ட குடும்பமாயிருக்கலாம்..நாம் ஒரு 10 பேரோ அல்லது 20 பேரோ கொண்ட குழுக்களாக சேர்ந்து அங்கு ஒரு 7 /8 குடும்பங்களையோ அல்லது ஒரு தொகுதி சிறுவர்களையோ இனங்கண்டு அவர்களுக்கு மாதாமாதம் பணம் அனுப்புவதுடன் அவர்களுக்கு சரியான வழிகாட்டல்களையும் வழங்க வேண்டும்.

யோசித்து பாருங்கள் நாங்கள் Jaffna vil இருந்தவை எமக்கு தெரிந்தது A/L உம் Campusஉம் தான். அதனை விட்டால் விவசாயம்தான் என்று நினைத்து கொண்டு இருந்தோம். Colombo வந்த பின்னர்தான் தெரிந்தது இன்னும் பல வழிகளில் கல்வியை தொடர்ந்து நல்ல வேலைகளை பெற முடியும் என்பது. எனவே உதவியும் வழிகா ட் ட லும் சரியான முக்கியமானவை. அது சரி எப்படி உதவிபுரியவிரும்பும் 10/20 பேரை திரட்டுவது என்று யோசிக்கிறீர்களா?.

முதலில் ஒரு 2 பேர் சேர்ந்து கொள்ளுங்கள். Peer Pressure என்பது தண்ணி அடிக்கவும் பம்பல் அடிக்கவும் மட்டும் அல்ல இது போன்ற நல்ல விசயங்களுக்கும் பயன்படுத்தமுடியும். பொறுத்த நேரத்தில் பொறுத்த இடத்தில் வைத்து கேளுங்கள். இணைந்து கொள்வார்கள்.ஒவ்வொருவரும் £50-£100 or $75-$150 பங்களித்தாலே போதும் குறிப்பிடகூடிய உதவியை புரியமுடியும். நாங்கள் ஒரு நாள் வயதுபோய் மரணத்தை எதிர்பார்த்து இருக்கும்போது எம் கண் முன்னால் நிற்க போவது நாங்கள் வளர்க்க போகும் இந்த விருட்சங்கள்(சிறுவர்கள்,குடும்பங்கள்) தான். நாம் எந்த கார் ஓடினோம் அல்லது எந்த லொறி ஓடினோம் என்பதெல்லாம் அப்பொழுது சம்பந்தமில்லாத விடயம் ஆகிவிடும்.

மீது விழுந்த அடி மிக மோசமானது. கதி கலங்கி நிற்கிறோம். எமது Reaction ஆனது இரு திசைகளில் போகலாம். ஒன்று அழுது அழுது அழிந்து போவது. அல்லது தவறுகளை திருத்தி முன்பைவிட இன்னும் மேலே வருவது. அது எமது குணவியல்பை பொறுத்தது.

எங்களது Reaction எப்படி இருக்க போகிறது?நாங்கள் என்றும் இல்லாதவாறு எங்கள் மக்களை மேலே கொண்டு வரபோகிறோமா? அல்லது அவர்கள் மேலும் கீழே போவதை வேடிக்கை பார்க்கபோகிறோமா?

1983 ஆம் ஆண்டுக்கு பிறகு Sri Lankaவில் இருந்து வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு குடி பெயர்ந்த தமிழர்களும் அவர்களது சந்ததியினதும் மொத்த எண்ணிக்கை ஏறத்தாள 11 இலட்சம். இதில் எனக்கு Singapore, South Korea மற்றும் Middle eastபோன்ற நாடுகளில் நல்ல சம்பளத்தில் இருக்கும் தமிழர் எண்ணிக்கை பற்றி கண்டுபிடிக்க முடியவில்லை.[ Canada- 400 000, UK - 300 000,FRANCE - 100 000 AUS - 50 000,SWISS - 50 000, USA - 35 000, ITALY - 25 000, NORWAY-15 000, NETHARLAND - 10 000, SWEDAN - 5 000, NEW ZEALAND - 5 000]

அதற்கு முதல் என் மனத்தை அடிக்கடி குடையும் ஒரு விடயம். வன்னி மக்கள் இன்று மாபெரும் மனித பேரவலத்தை சந்தித்து இருக்கிறார்கள். ஆனால் கிழக்கு மக்களும் இது போன்று அல்லாவிட்டாலும் அவர்களும் பேரவலத்தை சந்தித்து ஒரு வருடம்தான் ஆகிறது. சுமார் 150 000 பேர் பல தடவை இடம்பெயர்ந்து மோசமாக பாதிக்கபட்டிருக்கிறார்கள். அவர்களிலும் பலர் விதவைகள். ஊனமடைந்தோர் பலர். அன்றாடம் வாழ்க்கையோடு போராட்டம் நடத்தும் பலர். நாம் அவர்களை கைவிடுவோமாக இருந்தால், நாம் அவர்களுக்கு செய்யும் துரோகம் கருணா அவர்களுக்கு செய்ததுரோகத்திலும் பார்க்க மோசமானது. வெளிநாடுகளில் வாழும் கிழக்கு மாகாண மக்கள் மிக குறைவு என்பதையும் நாம் கணக்கில் எடுக்கவேண்டும்.

எனவே இப்பொழுது வசதியாய் வாழும் 11 இலட்சம் வெளிநாட்டு தமிழர் கண் முன்னால் சுமார் 4.5 இலட்சம் (வன்னி - 3 இலட்சம், கிழக்கு- 1.5 இலட்சம்) எம் மக்கள் வரண்டு துவண்டு நிற்கிறார்கள்.சரி இந்த 11 இலட்சம் பேரில் 4.5 பேர் தான் உதவ முன்வந்தாலே போதும். எங்களின் ஒருவரின் ஒரு நாள் சம்பளம்( இங்கே ஒரு க டையில் சாமான் நிரப்பும் வேலை செய்தால் கூட) அங்கே ஒருவரின் ஒரு மாத பராமரிப்புக்கு போதுமானது. ஏன் நீங்கள் படிப்பவராக இருந்தால் கூட தினம் ஒரு Soft drink இற்கு பதில் Tab water அல்லது வீட்டில் இருந்து போத்தலில் தண்ணீர் கொண்டு வந்து அருந்துங்கள். சேமித்து விடுவீர்கள். மனம் உண்டானால் இடம் உண்டு.

சாட்டு போக்கு சொல்வதானாலும் சொல்லலாம்.எனக்கு மாமா, சித்தி, பெரியப்பா, சித்தப்பா Campஇல் இருக்கிறார்கள் என்று சாட்டு சொல்லலாம். அது குடும்ப கடமை. அதற்கு மேலும் ஒரு கடமை இருக்கிறது.மனம் உண்டானால் இடம் உண்டு.

Part Time வேலை செய்யும்போது சொல்வோம் Full time வேலை கிடைக்கட்டும் உதவி செய்வோம் என்று. Full time வேலை கிடைத்தபின் சொல்வோம் கட்டி முடியட்டும் உதவி செய்வோம் என்று. Loan கட்டி முடிந்தால் சொல்வோம் வீடு அல்லது கார் அவசியம் அதன்பின் உதவி செய்வோம் என்று. அதுசரி Full time வேலை கிடைக்கட்டும் பின்பு சாப்பிடுவோம் என்று சொல்வதில்லையே. அதை மட்டும் தினமும் செய்கிறோம்.அந்த கட்டம் வந்தாச்சு. அதாவது சாப்பிடுவது எப்படி அன்றாட அத்தியாவசிய தேவையோ அதேபோல் உதவி செய்யவேண்டியதும் அத்தியாவசிய தேவையாகிவிட்டது

இது நவீன காலம். ஆக்கிரமிப்பு தந்திரங்கள் மாறிவிட்டன. படை வைத்து போர் நடத்தி நிலத்தை பிடித்து இனத்தை அழிக்கின்ற தந்திரத்துக்கு மேல் இன்னொரு தந்திரம் முழுமூச்சுடன் முன்னால் வருகிறது. அது தான் நாங்கள் இதுவரை பார்த்த இரண்டாவது முனை. அதாவது பொருளாதாரரீதியில் நசுக்கி வைத்திருப்பது.

நன்றி.
கவிதாகரனுடன் உங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொள்ள..
kavithaharan@yahoo.com

Tuesday, May 5, 2009

நினைவுகளின் ஓசை

நினைவுகளை அசை போடுதல் என்பதே கண்ணை மூடி காது குடைவதைப் போல ஒரு சுகானுபவம். ஊரையும் உறவுகளையும் பிரிந்து புலம்பெயர்ந்து வந்துள்ள எங்கள் மனக்காயங்களை மயிலிறகால் வருடி மருந்திடுவதும் நினைவுகள் தாம். அந்த நேரத்தில் பைத்தியக்காரத்தனமாக தெரிந்த விடயங்கள் சில இன்றும் கவிதையாக இனிக்கின்றன.


கிட்டிப்புள்
அடித்து
விளையாடிய
வெட்டக் காணி.

துலா இழுத்து
அள்ளிக்குளித்த

தண்ணியின்
குளிர்மை.


வெயிலுக்கு
ஒதுங்கும்
வேப்ப மர
நிழல்.


மாமரமேறி
ஆய்ந்து தின்ற
கொந்தல்

மாம்பழ சுவை.

அப்பப்ப
தெருவேறும்
அயல் வீட்டு
சண்டைகள்.


வெள்ளி தோறும்
குறை நிறைகளுடன்
சந்திக்கும்
தட்டாங்குளப் பிள்ளையார்.


எண்ணை தப்பி
இரட்டை ஜடை
பின்னலுடன்
சைக்கிளில்
உலா வரும்

உள்ளூர் அழகிகள்.

படித்து பட்டங்கள்
பெற முன்னரே
பட்டங்கள்
அள்ளி வழங்கும்
நட்பு வட்டாரம்.

மழை
விட்டுச் செல்லும்
மண் வாசம்.

எல்லாமே
தொலைத்த பின்
உயிர் மட்டும்
கையிலேந்தி
சிதறிவிட்டோம்
நினைவுகளை,
சிந்த விடாமல்.

பாரதி.சு

Wednesday, April 8, 2009

நெஞ்சு பொறுக்குதில்லையே.....

"மாற்றம் வரும் நாளை ..."என்ற என் எண்ணம் மட்டும் தான் மாறாதிருக்கிறது ஈழப்பிரச்சனையை பொறுத்தவரை. எம் மக்கள் தொடர்பான செய்திகள் எல்லாமே வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலவே வெளியாகின்றன. மனிதநேயம், மனிதாபிமானம் என்பன எல்லாமே சர்வதேச பிராந்திய நலன்கள் முன்னால் வெற்று வார்த்தைகள் தாம் போலும்.

புலத்திலே தொடரும் அமைதிவழி தொடர் போராட்டம் ஒன்றெ எமக்கான இறுதி நம்பிக்கை.......எமக்கான தீர்வை பெற்றுத் தர சர்வதேச நாடுகளை நிர்ப்பந்திப்பதே எம்முன்னால் உள்ள சாத்தியமான தெரிவும் கூட.
சர்வதேசம் கூட "ஏதோ" ஒரு முடிவை எடுத்துகொண்டுதான் வாளாதிருக்கிறதோ???

இந்நேரத்தில் கூட நம்மிடையே ஒருசிலர் பழைய குப்பைகளை கிளறி கும்மியடிப்பது தத்தம் "இருப்பை" நிலைநிறுத்தவன்றி வேறெதற்கு??
எதையெடுத்தாலும் புலிஆதரவு, புலியெதிர்ப்பு என கபடியாடுவதே ஒரு சிலருக்கு வேலையாகி போய்விட்டது.
இவர்கள் எல்லோரும் எதையெடுத்தாலும் மாக்சிசம், ஜன நாயகம் என அள்ளிவிடுவாங்க... ஆஹா...கேட்க சுவாரசியமாக இருக்கிறதே என்று கொஞ்சம் சீரியசாக ஏதாவது "வேலைத்திட்டம் " இருக்கா எனக் கேட்டால் மோவாயை சொறிவாங்க.
ஏதாவது "இருந்தால்" தானே சொல்ல........ நான் பதிவு போட்டு கொல்ற மாதிரி இவங்கள் பேசியே உயிர வாங்குற வகையறாக்கள்.

அப்புறம் நம்ம சினிமா பக்கம் சீரியஸாக பார்த்தால்..........
எம்மக்களின் அவலத்தின் பேரால் தொடரும் தமிழக அரசியல் கூத்துகள் அசிங்கமான காட்சிகள்.
அரசியல் "வியாபாரிங்க " எல்லோருமே நிர்வாணமாக..>>தூ..
நம்ம தொப்புள்கொடி தலைவருங்க தேர்தல் வரும் போது ஓட்டுக்காக ஒட்டுறதும் மத்தபடி வெட்டிவிடுறதுமுன்னு அவங்க தொல்லையே தனியான ஒரு எபிசோடு, ஆதலால் தமிழக மக்களே நீங்கள் விழிப்பாகவிருந்து உணர்வுகள் மரக்காத மக்கள் தாம் மாந்தைகள் அல்லர் என உங்கள் தலைவலிகளுக்கு... மன்னிக்கவும் தலைவர்களுக்கு எடுத்துக்காட்டுங்கள்.
இல்லை... தேர்தல் இலவசங்களுக்கு ஆசைப்பட்டு உள்ள "கோவணத்தையும்" இழந்திடாதீங்க.

உறக்கமில்லா இரவுகள்
நீளுகின்றன......
அப்பிகிடக்கும்
இருட்டுப் போலவே
விம்மி வெடிக்கும் - என்
மனமும்
உறவுகளின் கதறல்
நாரசமாய்.........
உணர்வுகளின் உஸ்ணமோ
பெருமூச்சாக....
எத்தனை விதமான
கனவுகள்
அத்தனையும்
பொய்யானதோ..?
அவலச்சாவொன்று - தான்
நிஜமானதோ..?
விடை காணாத
வினாக்களுக்குள் - எந்தன்
குமுறல்கள்
புதைகின்றன.
ஆசையுடன் அசைபோட்ட
ஞாபகப்பதிவுகளே
முட்களாக........
விழி ததும்பும் கண்ணீரில்
நினைவுகளைக்
கரைக்கின்றேன்!!
சு.பாரதி.




















Thursday, February 5, 2009

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்....

உணர்வுகளின் முன்னே "புறச்சூழல் தாக்கம்" வீரியமிழந்து நிற்கும் என்பது நேற்று மாலை (Feb.4) டொரண்டோ நகரில் கனேடியத்தமிழர்களால் நடாத்தப்பட்ட, இலங்கையரசின் இனஅழிப்பு போரை நிறுத்தக்கோரும் "மெழுகுதிரி" போராட்டம் எடுத்துக்காட்டி நின்றது.

கடந்த ஒரு மாதகாலமாகவே தாயகத்தில் இடம்பெறும் சம்பவங்கள் என்னைப்போன்ற சாதாரன தமிழக, புலம்பெயர் உறவுகளுக்கு மிகமோசமான மனக்கிலேசத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது எல்லோராலும் உணரக்கூடியதே.

சர்வதேச நாடுகளின் பாராமுகம்(?) அந்தந்த நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தினால் சற்று நம்மை நோக்கி "ஏதோ" அசையும் தன்மைக்காவது இட்டுச்சென்றுள்ளது. ஆனாலும் உடனடி மாற்றங்கள் எங்கள் அவசர தேவையாயினும் அவை நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறைவு. (இல்லை என்பதே கசப்பான உண்மை)...உடனடியாக எதிர்பார்ப்பதும் ஏமாற்றத்தினை விதைத்து நம்மை சலிப்புற செய்யும். 'அடிக்க அடிக்க தானே அம்மியே நகர்கிறது'...ஆதலால் ஏனைய சமூகங்களினை "வெறுப்பேற்றாது" தொடர்ந்தும் ஆரோக்கியமான முறையில் நம் போராட்டத்தினை மேற்கொள்வோம். நிச்சயம் காலம் நல்ல பதிலையே தரும் நம்புவோம்.
என்றோ இவ்வாறு தொடங்கியிருக்க வேண்டிய எம் "மக்கள்" போராட்டம் சற்று காலம் தாழ்த்தியேனும்....இப்போதாவது தெருவில் இறங்கினோமே......
இதுவே...............



திலீபன் அண்ணா அன்றுரைத்த "மக்கள் புரட்சி".


பெப்.4 அன்று மாலை...........
பகுதிநேரவேலைக்கு செல்முன் "மெழுகுதிரி"போராட்டத்தில் கலந்துவிட்டு செல்வது என்று முடிவெடுத்திருந்த்தேன். அவ்வாறே செல்லும் போது அன்றைய காலநிலை காரணமாக போராட்டத்தில் கலந்துகொள்ளப் போகும் மக்கள் எண்ணிக்கை பற்றிய சந்தேகம் கூட எனக்கிருந்தது. ஆனால் உதிரத்தை உறையச் செய்யும் அந்த மாலைக்குளிர் நிலையினையயும் பொருட்படுத்தாது எம்மவர்கள் அந்த உணர்வுப்போரட்டத்தில் கலந்திருந்தது என்னைப்பெருமிதம் கொள்ளவைத்தது . வயோதிபர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் குழந்தைகள் எல்லோரும் ஒரே குரலில் அமைதி வேண்டி கோஷமிட்டனர்.
பல தடவைகள் என் கால், கைகள் விறைப்படைந்து செயலிழக்கும் போதெல்லாம் எல்லோர் போலவும் அருகிலிருந்த "plaza"க்குள் சென்று என்னை "warm up" பண்ணிக்கொண்டு கவனஈர்ப்பில் கலந்து கொண்டேன். ஏனென்றால் அன்றைய குளிர் அப்படி.
இந்தப் போராட்டம் எம்மக்களுக்கு (வன்னி மக்கள் என்று கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை.) உடனடி நிவாரணமளிக்காவிட்டாலும் ஏதோ எம்மால் இயன்றது...வரலாற்றுப்பக்கங்களில் இருந்து விடுபட்டுச்செல்ல நான் விரும்பவில்லை.
இந்த இணைப்பினை கிளிக்கி கவனஈர்ப்பு தொடர்பான கனேடிய ஊடக செய்தியை பாருங்கள்.
http://www.citynews.ca/news/news_31842.aspx





என்றும் அன்புடன்,
பாரதி.

Tuesday, January 27, 2009

காதலர் தினம்!!

காதல் உள்ளங்களுக்கு எனது காதலர் தின வாழ்த்துகள்.
எப்போதோ கிறுக்கியதை இன்று உங்கள் பார்வைக்காக........
எல்லா இடங்களிலும் களை கட்டிவிட்டது காதலர் தின கொண்டாட்டங்கள்.வாழ்த்து அட்டைகள் என்ன!! அன்பளிப்புகள் என்ன!! அப்பப்பா.....என்னமாய் அசத்துறாங்க.

வழக்கம் போலவே எனக்கு அட்டையும் இல்லை....அன்பளிப்பும் இல்லை.
எப்படித் தான் நான் குப்புறப்படுத்து கண்ணை மூடி கஷ்டப்பட்டு கலராய் கனவுகள் பல கண்டாலும் கண்ட கனவுகளில் "தாவணிக்கனவுகள்" மட்டும் பலித்ததேயில்லை...... (எனக்கு கன்னிராசி இல்லையோ...)
எனக்கு மட்டும் இப்படியெல்லாமேன்??..சரி சரி..அதவிடுங்க.

ஒரு காலத்தில் பயந்து பயந்து "லைன்" விட்ட நம்மாளுங்க காதல் கூட சற்றே (முழுமையாக இல்லாவிட்டாலும்) வாழ்த்து மடல் கொடுக்குமளவிற்கு பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது.
அதிலும் , ஒரு சிலரின் "பரிணாம வளர்ச்சி" ச்சும்மா "அதிருதில்ல " ரகம்.
பரவாயில்ல அவங்களாவது.....):) ஜமாய்க்கட்டும்....

என்ன!! ஒவ்வொரு காதலின் வெற்றிக்குப் பின்னாலும் பல காதல்களின் தோல்வி தலையை தொங்கப்போட்டு நிற்பது தான் தவிர்க்கமுடியா வேதனை.
என்ன செய்வது???எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை என்று மனதை தேற்ற வேண்டியது தான். take it easy...
"காதலர் தினம்" என்பதே காதலுக்கு மரியாதை செய்யும் நாள் என்பதையும் தாண்டிய ஒரு வணிக நோக்கான நாள் என்பது தான் என் எண்ணம். உண்மையும் அதுவே!!
அதற்காக ஐயோ!! எங்கே எமது கலாச்சாரம்.... புண்ணாக்கு..அது..இது.... என்று வெற்று கூச்சல் போடுவதிலும் எனக்கு துளியும் உடன்பாடில்லை.பெப்.14 லிலோ அல்லது கன்றாவி எப்பவாச்சுமே கொண்டாடிற்றுப் போறாங்க......விடுங்கப்பா........

இன்னொரு முக்கியமான சேதி....எல்லோரும் காதல் பண்றாங்களே..... நாம கூட பண்ணினா என்னான்னு மட்டும் காதல பண்ணாதிங்க.....அப்புறம் "time pass"க்கு பண்ணி வாழ்க்கையில் நல்ல " time"மே போச்சுன்னு சும்மா புலம்பவும் கூடாது.

இது எங்கேயோ படித்ததில் பிடித்தது.

love...
"Love is not about finding the right person, but creating a right relationship. It's not about how much love you have in the beginning but how much love you build till the end.

அடடா!!அப்படிப்போடு .......
என்ன அழகாக காதல் எனும் உறவை மிக எளிதாக புரிய வைக்கும் ஒரு சொல்லாடல்.
இதெல்லாம் புரிந்தா love பண்றாங்க???
காதல்
என்னில் -நான்
காணும்
கடவுள்.


காலச்சக்கரத்தின்
சுழற்சியில்
முகவரிகள் மட்டுமல்ல...
முகங்கள் கூடமாறினோம்...
என் முகவரி தேடி - தொலைத்த
உன் முகவரி
இன்னொருவன் கையில்..
ஆனாலும்
சொல்லாத
என் காதல் மட்டும்
அதே இளமையுடன்...
என் கையில்.
சு.பாரதி (2008)


இதுதான் காதல்
காதல்!!
இதயங்களின் சூட்டில்
கருவாகும்
ராகம்.
காதல்!!
பருவ உணர்வுகளின்
தாளம்.
காதல்!!
பொய்யில் புனையும்
உண்மை.
காதல்!!
நீயும் நானும்
நாமாகும்
மாயக்கண்ணாடி.
ஆக மொத்தம்....
காதல்!!
கனவுலகின்
மயன்.

சு.பாரதி (2001)


என் காதலி வருகிறாள்
கருக்கட்டிய
மேகமூட்டத்தின் குளிர்ச்சி
என் இதயத்தில்....
மரங்களற்ற சாலைகள்
இன்று
பூத்துக்குளுங்கும்
நந்தவனச் சோலையாக!!!
சுழற்றியடிக்கும் காற்று - கூட
வருடும் தென்றலாக!!!
என்ன மாயமோ....
நான் கூட அழகாக - மிக
அழகாக...
தூரத்தே வருகிறாள்
என் காதலி.
சு.பாரதி (2001)


பி.கு:-என்னடா!! இந்தளவு உளறுகிறானே......இவனுக்கு அனுபவமா??? அடப்பாவமே!! என்றெல்லாம் "உச்" கொட்டாம வேலையை பாருங்கப்பு.

hydroxycut recall